Friday, December 25, 2009

ஸ்ரீ மணக்குள விநாயகரின் ஸ்தல வரலாறு பகுதி-1

        மணற் குளத்து பிள்ளையார்

  புதுவையில் மிகவும் பழமை வாய்ந்த மற்றும்
சரித்திரச் சான்று பெற்ற ஆலயங்களுள்
முதன்மையானது -
அருள்மிகு ஸ்ரீ மணக்குள விநாயகர் ஆலயம்.

இவ்வாலயம் அரவிந்தர் ஆசிரம பகுதியில்,
கவர்னர் மாளிகை-தலைமை தபால் அலுவலகம்
அருகில் அமைந்துள்ளது.
இந்த தெருவை மணக்குள விநாயகர் கோவில் தெரு
என்றே அழைப்பர்.

கி.பி.15-ம் நூற்றாண்டுக்கு முன்னரே இக்கோயில்
எழுப்பப் பட்டிருக்க வேண்டும் என்று சரித்திர
சான்றுகள் தெரிவிக்கின்றன.
மணற்குள விநாயகர் என்று பெயர் வரக்காரணம்
-இக்கோயில் கடற்கரைக்கு அருகில் இருந்ததால்
அங்கு மணல் அதிகமாக இருந்ததாலும்,விநாயகர்
அம்மணற் பரப்பின் நடுவே இருந்த குளத்தின்
கரையில் இருந்ததாலும்-அவரை மணற் குளத்து
பிள்ளையார் என்றே அழைத்தனர் என்று தெரிய
வருகிறது. காலப்போக்கில் மணற் குள விநாயகர்
என்ற பெயர் மருவி மணக்குள விநாயகர் என்று
அழைக்கப் பெற்று வருகிறார்.


மணற் குளத்து ( மணல் குளம் ) அருகில் இருந்த
பிள்ளையாரை முரட்டாண்டி சாமியார் என்று
அழைக்கப் பெற்ற ஸ்ரீ தொள்ளைக் காது சித்தர் தான்
பூஜித்து வந்தார்.”வேதபுரம்”, ”வேதபுரி” என்று அழைக்கப்பெற்ற
இப்புதுவை பெரும்பகுதி காடாக இருந்த பொழுது,
மணற் குளம் என்று அழைக்கப்பட்ட குளக்கரையில்
எங்கிருந்தோ வந்த ஒரு ஆண்டி விநாயகர் சிலையை 
பிரதிஷ்டை செய்து தினமும் பூஜை செய்து வந்ததாக
ஆன்றோர்கள் கூறுவர்.
அந்த ஆண்டி தற்பொழுது “முரட்டாண்டி” என்று
அழைக்கப்படும் ஊரில் தங்கியிருந்து அங்குள்ள
அம்மனை தினமும் பூஜை செய்து வந்தவர்.
அங்கிருந்து ஐந்து மைல் தொலைவில் உள்ள
புதுவைக்கும் தினமும் நடந்து வந்து விநாயகரை
வழிபட்டு வந்துள்ளார்.
அவரின் முரட்டுத்தனமான செய்கையை கண்ட
மக்கள் அவரை “முரட்டு ஆண்டி” என்று அழைத்து
வந்தனர். காலப்போக்கில் அவர் தங்கியிருந்த ஊர்
அவர் பெயரைக் கொண்டே “முரட்டாண்டி சாவடி”
எனவும், ”முரட்டாண்டி” எனவும் வழங்கப்படலாயிற்று.
முரட்டு ஆண்டியின் காதில் பெரிய துளை
இருந்ததால் பின்னர் அவர் “தொள்ளைக் காது சித்தர்”
என அழைக்கப் பெற்றார்.

(ஸ்ரீ தொள்ளைக்காது சித்தரின் வரலாற்றை தெரிந்து
என்று கிளிக் செய்யுங்கள்.)

Wednesday, November 18, 2009

ஸ்ரீ மணக்குள விநாயகர் ஸ்தல வரலாறு பகுதி-2

மணற் குளத்து விநாயகர்



முரட்டாண்டியில் பிரஞ்சு அதிகாரிகளின் தொல்லை
அதிகமானதால் சுவாமிகள் அவ்விடம் விட்டு நகர்ந்து
புதுவை பாலாஜி திரையரங்கு அருகில் உள்ள
ஆனந்த ரங்கபிள்ளையின் தோட்டத்திற்கு வந்து
ஒரு சிறு குடிசை அமைத்துக் கொண்டு
தங்கினார். அவ்விடத்து மக்கள் சுவாமிகளின் மேல்
மிகவும் அன்பாயிருந்து பணிவிடை செய்து வந்தனர்.
சுவாமிகளின் குடிசையை “சித்தன் குடிசை” என்று
அழைத்து வந்தனர். இன்றளவும் அப்பகுதி
அப்பெயரிலேயே அழைக்கபடுகிறது. அவரின்
அருளால் அப்பெயர் மக்கள் மனதில் நிலைத்து விட்டது.
சுவாமிகள், அங்கிருந்து மணற் குளத்து பிள்ளையாரை
தினமும் இரு வேளையும் வழிபட செல்ல மிகவும்
வசதியாய் அமைந்தது.
காலங்கள் சென்றன. இறைவனின் அழைப்பை அறிந்தார்.
அவர் வேண்டுகோளின் படி அவர் மறைவிற்கு
பின் அவருடைய உடல் பிள்ளையாருக்கு அருகிலேயே
மணற் குளத்தங்கரையில் அப்பகுதி மீனவர்களால்
சமாதி அமைக்கப்பட்டது.
தினமும் அப்பகுதி மக்கள் வழிபாடு நடத்தி வந்தனர்.
பிள்ளையாருடன் அவருக்கும் பூஜைகள் செய்யப்பட்டு
வந்தது.
மணற்குள விநாயகர் கோவில் கடற்கரையைச் சார்ந்துள்ளதால்
இது கணாபத்திய ஆகமப்படி அமைந்ததாகும்.
இவ்விநாயகருக்குப் புவநேச விநாயகர் என்ற பெயரும்
இருந்திருக்கலாம் என்று சரித்திர தமிழ் ஆராய்ச்சியாளர்
கூறுகின்றார்.
விநாயகருக்குப் பதினாறு மூர்த்தங்கள் உண்டென்று
சாத்திரங்களில் கூறப்பட்டிருக்கின்றது. பாலவிக்கிநேசர்
முதல் ஊர்த்துவ கணபதி ஈறாக உள்ள அப்பதினாறு
மூர்த்தங்களுள் புவநேசர் என்ற பதினான்காவதான
மூர்த்தத்தைச் சமுத்திரக் கரையில் பிரதிஷ்டை
செய்ய வேண்டுமென்று விதி இருக்கிறது.

அக்காலத்தில் வெள்ளைக்காரர்கள் (பிரஞ்சு) வசித்து
வந்த புதுவை பகுதியில் சாமியார் சமாதியாகி
விட்டபடியால் பொது மக்கள் “வெள்ளைகாரர் வீதியில்
தொள்ளைக் காதர் அமைந்து விட்டார்” என்று கூறி
வந்தனராம்.
அந்நாள் முதற்கொண்டு சித்தரை-வழிபடும்
அன்பர்கள் அனைவருக்கும் எண்ணிய எண்ணங்கள்
நிறைவேறுவது கண்டு-ஊர்மக்கள் மணற் குளத்து
விநாயகருக்கு கோயிலமைத்து வழிபட்டு வருகின்றனர்.
மணற்குளம் காலாவட்டத்தில் தூர்ந்து போய் விட்டது.
மணற்குளம் இருந்ததற்கான சான்றுகள் 250 வருடத்திற்கு
முன் புதுவை ஆனந்தரங்கபிள்ளையவர்கள் எழுதி
வைத்துள்ள நாட் குறிப்புகளில் உள்ளது.
அநீதியான காரியங்கள் நடந்து வந்த வெள்ளையர்
ஆட்சியில்,பழைய வேதபுரீஸ்வரர் ஆலயம் இடிக்கப்பட்டும்
வெள்ளையர் பகுதியிலேயே கோயில் கொண்டுள்ள
மணக்குள விநாயகரை நெருங்கக் கூட முடியவில்லை.
அன்னிய மதத்தைக் கொண்ட, புதுவையை ஆண்டு வந்த
அதிகார பலமிக்க அவ்வெள்ளையர்கள், விநாயகரை
அவ்விடத்தை விட்டு அப்புறப்படுத்த எவ்வளவோ முயற்சி
செய்து பார்த்தனர்.அளவிடமுடியாத கஷ்ட நஷ்டங்களைத்
தான் பிரதியாக கிடைக்கப் பெற்றனரே அன்றி விநாயகரை
இடம் பெயர்க்க முடியவில்லை. தாங்கள் எடுத்த முயற்சி
வீண் என்று பின்னர் உணர்ந்து மனந்தெளிந்து விநாயகரை
வழிபடலாயினர்.
அவர்கள் செய்கையைக் கொண்ட கர்ண பரம்பரை கதை
ஒன்று உண்டு.

Sunday, November 15, 2009

ஸ்ரீ மணக்குள விநாயகர் துணை

 ஸ்ரீ மணக்குள விநாயகர் துணை




                                 


திருவாக்குஞ் செய்கருமங் கைகூட்டுஞ் செஞ்சொற்
பெருவாக்கும் பீடும் பெருக்கு-முருவாக்கு
மாதலால் வானொரு மானை முகத்தானைக்
காதலாற் கூப்புவர்தங் கை
                                    -கபிலதேவர்


 
© free template